செங்கோட்டையனை ஆதரித்த முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் பதவியும் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைக்கு தொடர்ந்து, அவரின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.பி. ஏ. சத்தியபாமாவின் கட்சிப் பதவியையும் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கழக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும் இருந்த ஏ. சத்தியபாமா, இன்று முதல் அந்தப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5 அன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து,
“ஆட்சிமாற்றத்துக்காக கட்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கான முயற்சியை 10 நாளில் எடுக்காவிட்டால், மனம் ஒன்றுபட்டவர்கள் தனியாக நடவடிக்கை எடுப்போம். இந்தக் கோரிக்கைக்கு முடிவு எடுக்கப்பட்டால்தான், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்பேன்” எனக் கூறியிருந்தார்.
அவரின் இந்தக் கருத்துகள் அதிமுக உயர் நிலை ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதையடுத்து, செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், கோபி தொகுதியைச் சேர்ந்த சில ஒன்றியச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, கிளை, வார்டு செயலாளர்கள் உள்பட சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. சத்தியபாமாவும் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.