பொள்ளாச்சி மயானத்தில் முன்கூட்டியே தோண்டப்பட்ட 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் – பொதுமக்கள் அதிர்ச்சி

பொள்ளாச்சி நகராட்சி மயானத்தில், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட புதைகுழிகள் முன்கூட்டியே தோண்டப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சி மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி – உடுமலைச் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது. இங்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மயானத்துக்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்ததை கண்டு திகைத்தனர்.

பொதுவாக, ஒருவர் உயிரிழந்த பிறகு தான் உறவினர்கள் மயானப் பராமரிப்பாளர்களிடம் குழி தோண்ட ஏற்பாடு செய்வார்கள். ஆனால், ஒரே நாளில் ஒரு மரணம் மட்டுமே நிகழ்ந்த நிலையில், 20 புதைகுழிகள் தோண்டப்பட்டிருப்பது சந்தேகத்தையும் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தில் கூட அதிக மரணங்கள் நடந்தபோதும் இத்தகைய சம்பவம் நடைபெறாத நிலையில், தற்போது எதற்காக இப்படிச் செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தகவலின்படி, மயானத்தை பராமரித்து வரும் பாபு என்பவர், ஆட்கள் இல்லாத காரணத்தால், போக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி பல புதைகுழிகளை ஒரே நேரத்தில் தோண்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் குமரன் தெரிவித்ததாவது:

“மயானத்தில் தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. பொறுப்பாளர் பாபுவிடம் விசாரணை நடைபெறும்” என்றார்.

Facebook Comments Box