“எடப்பாடியை ஏற்க வாய்ப்பே இல்லை; நயினார் காரணமாகவே வெளியேறினேன்” – டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“நான் NDA கூட்டணியில் இணைந்தது, பிரதமர் மோடிக்காகவே. ஆனால் நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை. அதோடு, அவர் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப்பிடித்தது, நாங்கள் வெளியேறியதற்கான முக்கிய காரணம்.
அமித்ஷா, ‘அதிமுகவிலிருந்து ஒருவர்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொன்னார். ஆனால், ‘இபிஎஸ்தான் வேட்பாளர்’ என்று ஒருபோதும் சொல்லவில்லை. அதுபோல, நானும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன் என்று ஒருபோதும் கூறவில்லை. அவரை ஏற்றுக் கொள்வது என்பது தற்கொலைக்கு சமமானது. அதிமுகவுடன் எங்கள் தொண்டர்கள் சேர்ந்து பணியாற்ற முடியாது.
ஓபிஎஸ் வெளியேறியதற்கும் காரணம் நயினார் நாகேந்திரனே. அவர், ‘ஓபிஎஸுடன் பேசத் தயார்’ என்று சொல்வது உண்மையில்லை. அண்ணாமலை எங்களுக்குப் பின்னால் உள்ளார் என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்றது.
தற்போது அதிமுகவில் நிலவும் சர்ச்சையை முன்னிட்டு, விரைவில் செங்கோட்டையனை சந்தித்து பேசுவேன். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்தவர். அவரும், அவருடன் இருப்பவர்கள் சிலருமே எங்களுக்குப் பிரச்சினை.
2026 சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத கூட்டணி உருவாகும்,” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.