கச்சத்தீவு தொடர்பான பேச்சுவார்த்தை தேவையில்லை: இலங்கை அமைச்சர்
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அதனால் இதை பற்றிய எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை என இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, வட மாகாணத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்குவதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அந்த பயணத்தின் போது கச்சத்தீவுக்கும் போயிருந்தார். இது ஒரு சிறப்புப் பயணம் அல்ல. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இதனைச் சுற்றி எந்தவொரு பேச்சுவார்த்தையும் தேவையில்லை. தென்னிந்திய அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக இதனை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்,” என்றார்.
முன்னதாக, யாழ்ப்பாண நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர், “கச்சத்தீவு இலங்கைக்குரியது; வேறு யாருக்கும் கொடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் தவாக தலைவர் த.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தனர்.