தேமுதிக-விஜய் கட்சி கூட்டணி அமையுமா என்பது ஜனவரியில் தெரிய வரும்: விஜயபிரபாகரன்
விஜய் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு குறித்து ஜனவரியில் பொதுச் செயலாளர் அறிவிப்பார் என்று தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜயபிரபாகரன் மதுரையில் தெரிவித்தார்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், தேமுதிக பழங்காநத்தம் பகுதிச் செயலாளர் லட்சுமணன் மற்றும் தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் விஜயபிரபாகரன் கூறியது:

“தமிழகம் முழுவதும் ‘இல்லம் தேடி, உள்ளம் நாடி’ என்ற இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் நடக்கிறது. தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். தற்போது, தேமுதிக மக்களுடன் இணைந்துள்ளது.

விஜய் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு ஜனவரி 9-ம் தேதி, பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். விஜயகாந்துக்கும், விஜய்க்கும் நெருக்கமான நட்பு உள்ளது.

நாம் தமிழர் கட்சி சீமான் கடந்த காலத்தில் கேப்டன் ட்ரெண்டிங்கில் இருந்த போது, அவர் திட்டியதால் ஓட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசியலில் நிரந்தர நண்பனும், எதிரியும் இல்லை. விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அறிவார்ந்தவர்கள். அவரது திரைப்பட நிகழ்ச்சிகளில் நான் பலமுறை சென்றிருக்கிறேன்.

மதுரை எனக்கு புதிதல்ல. கேப்டன் கரம் பிடித்து வீதித்தடமாக வலம் வந்துள்ளேன். மதுரையின் சிறப்பு என்பது சப்பாடு. சிறப்பான உணவுகளை என் அப்பா எனக்கு வாங்கித் தந்துள்ளார். பல எதிர்ப்புகளைத் தாண்டி தேமுதிக கட்சி மதுரையில் வலுவாக வந்துள்ளது; அதற்கு முக்கிய காரணம் கேப்டன் விஜயகாந்த் தான்.

கேப்டன் மக்களுக்கு நலன் செய்யவே அரசியலில் வந்தார். உங்கள் ஆசையை நிறைவேற்ற லேடி கேப்டன் முன்வந்துள்ளார். அவர் தான் எனது அம்மா. பிரேமலதா விஜயகாந்தை அடுத்த ஜெயலலிதா எனக் கேட்கிறார்கள். என் அப்பா தமிழ் மொழி, தமிழ்நாடு வளர்ச்சி என்பதில் வாழ்ந்தார். யாரும் அரசியலுக்கு வரலாம், கூட்டணி அமைக்கலாம்; ஆனால் மக்களுக்கு தெளிவாக யாருக்கு ஓட்டு வைக்க வேண்டும் என்பது தெரியும். என் அப்பா லட்சியத்தை வெற்றிப்படுத்த என் குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு மக்களின் முன்னிலையில் இருக்கிறது. கட்சி எங்கள் சொந்த முயற்சியால் வளர்ந்து வந்தது” என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

Facebook Comments Box