“தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” – லண்டனில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஆண்டுக்கு குறைந்தது ஒருமுறையாவது குடும்பத்துடன் தமிழகம் வரவும், இயன்ற அளவுக்கு முதலீடு செய்யவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தை 2030க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற அரசின் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடுகள், சிறப்பு சலுகைகள், வெளிநாட்டு பயணங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் “TN Rising” பயணத்தின் போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு சென்ற முதல்வர், பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து ₹15,516 கோடி முதலீடுகளை உறுதி செய்து, 17,613 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார் என்று அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து பயண நிறைவாக லண்டனில் நடந்த ‘மாபெரும் தமிழ்க்கனவு – வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
- உலகம் முழுவதும் தமிழர்கள் எளிய பின்புலத்தில் இருந்து கல்வியால் உயர்ந்து, முக்கியப் பொறுப்புகளை வகித்து வருவது பெருமை.
- வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழின் அறிவிக்கப்படாத தூதர்களாக செயல்படுகின்றனர்.
- “ஆண்டுக்கு ஒரு முறையாவது தமிழகம் வாருங்கள். அங்கு இயன்ற முதலீடுகளைச் செய்யுங்கள். உங்களது சகோதரனாக நான் அங்கே இருக்கிறேன்” என்று உறுதியளித்தார்.
- வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து தமிழக இளைஞர்களுக்கு தகவல்களை பகிர்ந்து, அவர்களை முன்னேற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழர்களின் வரலாறும் பண்பாடும் இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக கீழடி, பொருநை, கங்கைகொண்ட சோழபுரம் போன்ற இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
“சாதி, மதம், ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடுகள் நம்மை பிளக்கக்கூடாது. தமிழராய் ஒன்றிணைந்து, எப்போதும் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயண நிறைவில் சமூக வலைதளத்தில் ஸ்டாலின் பதிவிட்டதாவது:
“ஜெர்மனியில் தமிழர்களின் உற்சாக வரவேற்புடன் தொடங்கிய TN Rising பயணம், லண்டனில் அவர்களின் அன்பான வாழ்த்துகளுடன் நிறைவடைந்தது. எனக்காக சகோதரனாய் கவனித்த புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.