அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி, பழனிசாமிக்கு காலக்கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்ற பல குழுக்கள் அதிமுகவில் உள்ளனர்.
இதனால், செங்கோட்டையன் என்ற புதிய குழு உருவாக வாய்ப்பு உள்ளது. அனைவரும் சுயநல நோக்குடன் இந்த பிரச்சினையை அணுகுவதால், இப்போது அதிமுக ஒருங்கிணைந்ததாக இல்லாமல் உள்ளது.
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜக பின்புலமாக செயல்பட்டு வருகிறது. இதை அதிமுகவினரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சொல்லிக் கொண்டிருப்பதால், பாஜக-அதிமுக கூட்டணி மேலும் பலவீனமடைந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதித்து மக்களை துயரப்படுத்திய பாஜக, தற்போது சிறிய அளவு வரியை மட்டுமே குறைத்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி பாராட்டத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு நாள் வரும் 12-ம் தேதி நடக்கிறது. அந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உடல் தானம் செய்ய தீர்மானித்துள்ளனர். இதன்மூலம் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.