சென்னை கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய்களுடன் போலீஸ் தீவிர சோதனை
தமிழக பாஜக மாநிலத் தலைமையகம் கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மோப்ப நாய்களின் உதவியுடன் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் எப்போதும் சுழற்சி முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை காவல்துறை தலைமை இயக்குநரின் அலுவலக மின்னஞ்சலுக்கு, “கமலாலயத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என தகவல் வந்தது.
உடனடியாக போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவையும், மோப்ப நாய்களையும் அழைத்து கமலாலயத்தில் தீவிர சோதனை நடத்தினர். மாநில அலுவலகச் செயலாளர் சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற சோதனையில் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை. மிரட்டல் வதந்தி என உறுதியாகியது. இதுகுறித்து மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாதுகாப்பு பிரிவு காவல் ஆணையர் தலைமையில் நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. அங்கு கூட வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், அது வதந்தி என தெரியவந்தது.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, கள்ளக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுவனே அந்த மிரட்டலுக்கு காரணம் என தெரியவந்தது. தற்போது அந்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.