மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம் – வைகோ அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணைப் பொதுச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கியதாக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே சில மாதங்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதன் காரணமாக அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (திங்கள்) அவரை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மல்லை சத்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்ட போதிலும், அவர் அளித்த பதிலில் குற்றச்சாட்டுகளை மறுக்கவோ, ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் அளிக்கவோ இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்த பின்னர், அவர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் கட்சியின் சட்டம் மற்றும் விதிகளின்படி துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.