ரூ.15,516 கோடி முதலீடு – 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணத்தின் மூலம் மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்கத் தயாராகியுள்ளன. அதேசமயம், உயர்கல்வி மற்றும் சிறுதொழில் துறைகளில் 6 அமைப்புகள் தமிழகத்துடன் கூட்டுத் திட்டங்களில் இணைய முன்வந்துள்ளன. ஏற்கெனவே இயங்கிவரும் 17 நிறுவனங்கள், பிற மாநிலங்களுக்கு செல்வதை தவிர்த்து, தங்கள் தொழில்களை தமிழகத்திலேயே விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை “மிகவும் வெற்றிகரமான மற்றும் பெருமைக்குரிய ஒன்றாக” வர்ணித்த முதல்வர், “கடந்த நான்கரை ஆண்டுகளில் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களுக்கும் நிறைவாக, இந்த முறை மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன” என்றார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டதும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கில் உரையாற்றியதும் இந்தப் பயணத்தின் தனிப்பட்ட பெருமைகளாக முதல்வர் குறிப்பிட்டார். மேலும், லண்டனில் கார்ல் மார்க்ஸ் நினைவிடம், அம்பேத்கர் இல்லம், திருவள்ளுவர் சிலை போன்ற இடங்களைப் பார்வையிட்டது தனிப்பட்ட திருப்தியை அளித்ததாகவும் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்க மாநிலத்தின் மனிதவளம், உட்கட்டமைப்பு, சலுகைகள் போன்ற அம்சங்களை நேரடியாக முதலமைச்சர் எடுத்துக்கூறுவது முக்கியம் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். “வெளிநாட்டு பயணங்கள் தேவையில்லை” என்று சிலர் கேள்வி எழுப்புவதற்கு பதிலாக, ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டின் திறனை அப்போதுதான் அறிந்ததாகவும், இனி அதிக முதலீடுகள் வரப்போவதாகவும் குறிப்பிட்டதாக அவர் எடுத்துரைத்தார்.

முதல்வர் ஸ்டாலின், வரும் 11-ஆம் தேதி ஓசூரில் ரூ.2,000 கோடி மதிப்பில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையைத் திறந்து வைக்க உள்ளதாகவும், மேலும் ரூ.1,100 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் அறிவித்தார். அதேபோல, தூத்துக்குடியில் நடந்தது போல, ஓசூரிலும் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலளித்த அவர், “இந்தப் பயணம் எனது தனிப்பட்ட முதலீட்டிற்காக அல்ல. பெரியாரின் சிந்தனைகளை அங்கே நிலைநாட்டியிருக்கிறேன். அது தான் உண்மை முதலீடு” என்றார்.

மேலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், போட்டியுடன் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box