சென்னையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்கள் வழங்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசுப் போக்குவரத்து கழகங்களில் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, சிஐடியு சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் அயனாவரம், வடபழனி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநகர போக்குவரத்து பிரிவு தலைவர் துரை, பொதுச் செயலாளர் தயானந்தம், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொதுச் செயலாளர் தயானந்தம், “போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு உறுதியளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். குறிப்பாக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் எப்போது வழங்கப்படும் என்பதற்கான தெளிவான உறுதியை அரசு தர வேண்டும்,” என தெரிவித்தார்.

Facebook Comments Box