செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் கலந்துரையாடலா?
டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு வைத்தார். இதையடுத்து, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை பழனிசாமி பறித்தார். மேலும், கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் பதவிகளை இழந்தனர்.
இதனால், செங்கோட்டையன் வீட்டிற்கு ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்நிலையில், அவர் கோபியில் இருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம் வழியாக புதுடெல்லி சென்றார்.
செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
“நான் ஹரித்வாரில் உள்ள கோவிலுக்குச் செல்கிறேன். பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி செல்லவில்லை. 9ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் இல்லை. என் கோரிக்கை நியாயமானது என்று தொண்டர்கள் சொல்கிறார்கள். கோயிலுக்குச் சென்று வந்தால் மனம் சாந்தமாக இருக்கும். டிடிவி தினகரனின் கருத்துக்கு நான் பதில் கூற முடியாது. கட்சியின் நன்மைக்காக என் கருத்தை தெரிவித்தேன். பல முடிவுகளை பொதுச்செயலாளர் எடுத்துள்ளார்; அதில் நான் கருத்து சொல்ல முடியாது. காலம்தான் தீர்ப்பை வழங்கும். நான் ஹரித்வாருக்குச் செல்கிறேன், ராமரை மட்டுமே சந்திக்கிறேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை. நாளை பிற்பகல் திரும்புவேன். கடந்த 2 நாட்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்னைச் சந்தித்துள்ளனர்” என்றார்.
அப்போது, “உங்களை அதிமுக நிர்வாகிகள் யாராவது சந்தித்தார்களா?” என்ற கேள்விக்கு முதலில் “நோ கமென்ட்ஸ்” என்ற அவர், மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டபோது “சஸ்பென்ஸ்” என்று பதிலளித்தார். பழனிசாமி தரப்பில் இருந்து யாராவது தொடர்பு கொண்டார்களா என்ற கேள்விக்கும் “நோ கமென்ட்ஸ்” எனக் கூறிவிட்டு புறப்பட்டார்.
செங்கோட்டையன் சென்ற அதே விமானத்தில் திமுக எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), பிரகாஷ் (ஈரோடு) ஆகியோரும் பயணம் செய்தனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பயிற்சியில் கலந்துகொள்ள தான் டெல்லி செல்கிறோம் என அவர்கள் விளக்கினர்.
எனினும், டெல்லியில் தங்கியிருந்த செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்து அதிமுக உள் நிலைமை குறித்து ஆலோசித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.