தற்காலிக டிஜிபி நியமனம் ஏன்? – உச்ச நீதிமன்ற கேள்வி; தமிழக அரசின் விளக்கம்
தமிழகத்தில் தற்காலிக டிஜிபி நியமித்ததற்கான காரணத்தை விளக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர். அதோடு, நிரந்தர டிஜிபியை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யுபிஎஸ்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாக்கல் செய்திருந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய டிஜிபி நியமனத்துக்கான பரிந்துரைப் பட்டியலை தமிழக அரசு, மூன்று மாதங்களுக்கு முன்பே யுபிஎஸ்சி-க்கு அனுப்ப வேண்டியிருந்தது.
ஆனால், தற்போது வெங்கடராமன் தற்காலிக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற தற்காலிக நியமனம் செய்யக்கூடாது என்று பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்னரே உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை பின்பற்றவில்லை என்பதால், தமிழக தலைமைச் செயலருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, தற்காலிக டிஜிபி ஏன் நியமிக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், யுபிஎஸ்சி அனுப்பும் பட்டியலில் தனது பெயரும் சேர்க்கப்பட வேண்டும் எனக் கோரி, ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்று கூறப்பட்டது. அந்த வழக்கை தீர்ப்பாயம் ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிராகரித்தது. அதனால் தான் தற்காலிக டிஜிபி நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, யுபிஎஸ்சி விரைவாக பரிந்துரைப் பட்டியலை பரிசீலித்து, தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவமதிப்பு வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.