ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை முடித்து சென்னை வந்தார் முதல்வர் ஸ்டாலின் – உற்சாக வரவேற்பு

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு அவர் நேற்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான்கரை ஆண்டுகளில் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களுக்கும் நிறைவு கல்லாக, மிகச் சிறப்பான வெற்றிப் பயணமாக இது அமைந்துள்ளது. மொத்தம் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. மொத்தம் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன; 6 உயர்கல்வி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் கூட்டுச் செயல்பாட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளன; 17 நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. மறக்க முடியாத பயணமாக இது அமைந்துள்ளது” என்றார்.

மேலும், “சிலர் வெளிநாட்டு பயணம் எதற்கென கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூட விமர்சித்துள்ளார். ஆனால் நான் சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் தமிழகம் குறித்து எடுத்துரைத்தபோது, தமிழகத்தின் திறன்கள் பற்றி அங்குள்ள முதலீட்டாளர்களுக்கு புதிய புரிதல் ஏற்பட்டது. எதிர்காலத்தில் அதிக முதலீடுகள் தமிழகம் நோக்கி வரும் என்று உறுதி அளித்தனர்” என்று குறிப்பிட்டார்.

செங்கோட்டையன் அதிமுக பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, “ஆக்கப்பூர்வமாக பேசும் வேளையில், ஏன் அக்கப்போராக கேட்கிறீர்கள்?” என சிரிப்போடு பதிலளித்தார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த முதல்வருக்கு வழியெங்கும் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்பளித்தனர்.

மேலும், ஓசூரில் நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டைச் சுட்டிக்காட்டி, “செப்டம்பர் 11ஆம் தேதி ஓசூர் சென்று, ரூ.2,000 கோடியில் அமைக்கப்பட்ட டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையின் ஆட்டோமேட்டட் லேன் அமைப்பையும், பணியாளர் விடுதியையும் திறந்து வைக்கிறேன். அதே நேரத்தில் ரூ.1,100 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கான அடிக்கல் நாட்டுகிறேன். தூத்துக்குடியில் நடந்தது போல, ஓசூரிலும் முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வர இருக்கின்றன” என்றார்.

Facebook Comments Box