“அதிமுக தனிநபர் சார்ந்தது அல்ல” – ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ்

அதிமுக ஒரு பெரிய இயக்கம், அது ஒரே நபரை மட்டுமே சார்ந்தது அல்ல என்று புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் முன்னாள் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையனின் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் அவரை மாவட்ட நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கோபி, பவானிசாகர் சட்டப்பேரவைகளின் நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி ஆதரவு தெரிவித்தனர். செங்கோட்டையனின் ஆதரவாளராக அறியப்படும் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி. காளியப்பன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், பண்ணாரி எம்.எல்.ஏ. கூறுகையில், “எப்போதும் பொதுச் செயலாளர் பழனிசாமியின் பக்கம் நாங்கள் இருப்போம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசிய ஏ.கே.செல்வராஜ், “அதிமுக இயக்கம் என்பது ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. இது ஒரு பெரிய இயக்கம். நாமெல்லாரும் இணைந்து செயல்பட்டால், பொதுச் செயலாளர் பழனிசாமியின் வழிகாட்டுதலின் கீழ் வரும் தேர்தலில் வெற்றியை பெறுவோம்” என்றார்.

புதிய மாவட்ட செயலாளரைச் சந்திக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் வாகனங்களில் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Facebook Comments Box