மதுரை – கேம்பர்லீ நகரங்கள் கலாச்சார இணைப்பு: பென்னி குயிக் நினைவுக்கு ஸ்டாலின் முக்கிய முடிவு
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக் நினைவாக, அவர் பிறந்த இங்கிலாந்தின் கேம்பர்லீ நகரமும் தமிழகத்தின் மதுரை நகரமும் கலாச்சார இணைப்புத் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன.
18-ஆம் நூற்றாண்டில் கடுமையான பஞ்ச நிலை காரணமாக, பென்னி குயிக் தனது சொத்துகளை விற்று முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர். அவரின் நினைவாக தேனி மாவட்ட கூடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 2022-ல் கேம்பர்லீ நகரப் பூங்காவில் தமிழக அரசு சிலை நிறுவியது.
லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பென்னி குயிக் குடும்பத்தினரைச் சந்தித்தபோது, மதுரை – கேம்பர்லீ நகரங்களை இணைக்கும் திட்டத்தை முன்னெடுக்க ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் கல்வி, சுற்றுலா, வர்த்தகம், கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றங்கள் நடைபெறும்.
கேம்பர்லீ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மதுரை மாணவர்கள் கல்வி பரிமாற்றத்தில் பயிலலாம். கீழடி போன்ற தொல்லியல் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படலாம். அதேசமயம் மதுரையின் கோயில் விழாக்கள், கைவினைப் பொருட்கள் உலகளவில் தமிழர் பண்பாட்டை பரப்பும். புதிய முதலீடுகள், சுற்றுலா, விமான சேவைகள் விரிவடையும்.
ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த கேம்பர்லீ தமிழர் சங்கம், “இத்திட்டம் தமிழகம் – இங்கிலாந்து கலாச்சார உறவை வலுப்படுத்தும்” என தெரிவித்தது.
பென்னி குயிக் பேத்திகள் மேரி, செர்லீ ஆகியோரை சந்தித்த ஸ்டாலின், “தமிழகம் உங்கள் இல்லமாகும். எப்போதும் வரவேற்போம்” என உரிமையுடன் அழைத்தார். இதனால் நெகிழ்ந்த குடும்பத்தினர், தமிழகம் வருவதாக உறுதியளித்து, வருங்கால நிகழ்ச்சிகளில் பங்கேற்க சம்மதித்தனர்.