கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜகவின் வழக்கம்: செல்வப்பெருந்தகை
கூட்டணிக் கட்சிகளை பிளவுபடுத்தி கூறு போடுவது பாஜகவின் வழக்கம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்போம் என்று பேசியிருக்கிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது சந்தர்ப்பவாத அரசியல். முத்துராமலிங்க தேவர் மீது பழனிசாமிக்கு உண்மையான பற்றில்லை. செங்கோட்டையன் விவகாரம் அவர்களுடைய உட்கட்சி பிரச்சினை” என்றார்.
அவர் மேலும், “பாஜக எங்கு கூட்டணி வைக்கிறதோ அங்கு கட்சிகளை பிளவுபடுத்துகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை பிரித்தது போல, எங்கும் அதையே செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு முன்னர், காங்கிரஸ் தேசிய ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா, “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை என திணிக்க பாஜக முயற்சிக்கிறது. வாக்குரிமையைப் பறித்து, தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் வலுவடைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.