சேலம், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் பழனிசாமி கலந்துரையாடல்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சேலத்தில் தனது இல்லத்தில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதுரை மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் அவர் சேலத்திலுள்ள இல்லத்துக்கு திரும்பியிருந்தார்.
அங்கு, சேலம் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.கே.செல்வராஜ், வெங்கடாசலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் மேயர் பழனிசாமி, ஈரோடு ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் சந்தித்து கலந்துரையாடினர்.
அந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிக்குப் பின்னால் செயல்படுவோர் யார் என்பதையும், அவருக்கு ஆதரவாக இயங்கும் நிர்வாகிகளை மறைமுகமாக கண்காணித்து நீக்குவது குறித்தும் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் விஷயத்தையும் அதிமுக பொதுச் செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் விவாதித்தார்.