மெட்ரோ நிலையங்களுக்கு கூடுதல் இணைப்பு வாகன சேவை – தனி துணை நிறுவனம் தொடங்க திட்டம்

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில், மொத்தம் 54 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பான, வேகமான மற்றும் வசதியான போக்குவரத்து என்பதால், மெட்ரோவில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.

2-ம் கட்ட மெட்ரோ திட்டப்பணிகள் நிறைவடைந்த பின், பயணிகள் வருகை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நிலையங்களில் இருந்து இலக்கிடம் வரை தடையில்லா பயண வசதி கிடைக்க, இணைப்பு வாகன சேவைகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, தனியாக ஒரு துணை நிறுவனம் அமைத்து இணைப்பு வாகனங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“மெட்ரோ பயணிகளின் தேவைக்கு மாநகர பேருந்துகள், சிற்றுந்துகள் மட்டும் போதாது. எனவே, புதிய துணை நிறுவனம் தொடங்க மாநில போக்குவரத்து ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், கால்டாக்சி, ஆட்டோ, வேன் போன்ற இணைப்பு வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும். மொத்தம் 500 வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 150 வாகனங்கள் வாங்கப்படும்” என தெரிவித்தனர்.

Facebook Comments Box