“திமுக அரசு செய்கிறது சமூக நீதி துரோகம்” – கர்நாடக சாதிவாரி கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அன்புமணி விமர்சனம்

“சமூக நீதி குற்றங்களைச் செய்த திமுக, இனிமேனும் சமூக நீதி துரோகத்தையும், சோம்பலையும் விட்டு விட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 22-ந்தேதி தொடங்குகிறது. அதற்கான பயிற்சி நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கர்நாடக மக்களுக்கு சமூக நீதி வழங்குவதற்கான அக்கறையும் தீவிரத்தையும் காட்டும் அந்த மாநில அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

2015-ஆம் ஆண்டு முதல் முறையாக கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. பத்து ஆண்டுகள் கழித்து புதிய தரவுகளைத் திரட்டும் நோக்கில் இரண்டாவது கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 7 கோடி மக்கள்தொகையைக் கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாட்களில் இந்த வேலை முடிக்கப்படுகிறது.

இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1.60 லட்சம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 2 கோடி குடும்பங்களிடம் 60 கேள்விகளுடன் இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. சமூக நீதி முழுமையாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அந்த அரசு அறிவித்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை மாறுபட்டது. பெரியாரின் பேரன் என்று சொல்வோரின் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதுவும் செய்யப்படவில்லை. இதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், அதிகாரம் எங்களிடம் இல்லை என்று சொல்லி திமுக அரசு காலத்தை வீணடித்துள்ளது. இல்லாத அதிகாரத்தையும் மக்கள் நலனுக்காக போராடி பெற வேண்டும்; ஆனால் திமுக அரசு, கையில் உள்ள அதிகாரத்தையே பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம் – தமிழகத்தில் யாருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என்ற தீய எண்ணம்தான்.

கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக 63 நாளில் ஒரு தனி கணக்கெடுப்பு கூட நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு எடுத்துக்காட்டுகள் இருந்தும், ஸ்டாலின் அரசு அசையவே இல்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு கணக்கெடுப்பு செய்யாததை விட பெரிய தவறு என்னவென்றால், சமூக நீதிக்காக அக்கறை கொண்டது போல நடிப்பதுதான்.

கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும், அந்த வாய்ப்புகளை வீணாக்கியது திமுக அரசுதான். முதலிரண்டு வாய்ப்புகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டுக்கே வந்திருக்கும். ஆனால் அந்த மூன்று வாய்ப்புகளையும் பாழாக்கி சமூக நீதியை புதைத்தது திமுக.

அத்தகைய சமூக நீதி குற்றங்களைச் செய்த திமுக, இனியாவது சமூக நீதி துரோகத்தையும், சோம்பலையும் விட்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box