“அதிமுக முதல்வர் வேட்பாளர் மாறினால், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தருவோம்” – டிடிவி தினகரன்
“பாஜகவில் உள்ள எந்த நபருக்கும் எனக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால், அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் நாங்கள் ஆதரிக்க தயார்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், மணவாள மாமுனிகள் மடத்தில் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றார். இருவரும் தனிப்பட்ட அறையில் சுமார் 5 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:
“குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய காரணங்களை கடந்த இரண்டு நாட்களாகவே விளக்கி விட்டேன். நயினார் நாகேந்திரன் எனது நெருங்கிய நண்பர்; அவர்மீது எந்தவித கோபமும் இல்லை. அவர் எப்போதும் என்னை சந்திக்கலாம். பாஜகவில் யாரிடமும் எனக்கு குறைச்சல் இல்லை.
ஆனால் துரோகத்தை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இணைவதற்கு எங்களால் முடியாது. அதிமுக சார்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை அறிவித்தால் நிச்சயம் ஆதரிப்போம். பழனிசாமி 10.5% இடஒதுக்கீட்டைச் சொல்லி வடதமிழக மக்களை ஏமாற்றினார். அவரை பதவியில் அமர்த்தியவர்களுக்கு துரோகம், நம்பிக்கை வாக்கெடுப்பில் துணை நின்றவர்களுக்கு துரோகம், ஆட்சியைத் தொடர வாய்ப்பு தந்தவர்களுக்கும் துரோகம் – இவ்வாறு எல்லா வழியிலும் துரோகத்தின் உருவமாகவே பழனிசாமி இருக்கிறார்.
இன்று அமைதியாக இருக்கும் தென் தமிழகம் குறித்து தேவையற்ற கருத்துகளை வெளியிட்டுள்ளார். பசும்பொன் தேவர் பெயரைப் பயன்படுத்தி சமூக விரோதமான அறிவிப்புகளைச் செய்தால் மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் கோட்டையாக இருந்த தென் தமிழகம், பழனிசாமி காலத்தில் பலவீனமடைந்து விட்டது. மக்களைப் பிளவுபடுத்தும் விதமாக அவர் செயல்படுகிறார்.
செங்கோட்டையன் மேற்கொண்ட நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது ஜெயலலிதா தொண்டர்களின் ஆசை. அது நிறைவேறும் என ஆண்டாள் சந்நிதியில் தெரிவித்துக்கொள்கிறேன்” என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.