திருட்டு வழக்கில் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை திமுகவிலிருந்து நீக்கம்!
ஓடும் பேருந்தில் தங்க நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவின் பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் அவரிடம் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், காஞ்சிபுரம்–சென்னை கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பேருந்தில், சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி (50) பயணம் செய்தபோது, அவருடைய 5 பவுன் தங்க நகை மாயமானது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பேருந்தில் பயணித்த வேலூர் மாவட்ட நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகியான பாரதி (56) தான் நகை திருட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், பாரதி மீது பல காவல் நிலையங்களில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரங்களில் இதை சுட்டிக்காட்டி, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இதனால், திமுக தலைமை அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டதால், நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார். அவருடன் எந்தத் தொடர்பும் வைக்கக் கூடாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊராட்சி மன்ற தலைவர் பாரதியிடம் இருந்த காசோலை கையெழுத்து அதிகாரமும் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.