“பிராட்வேக்கு மாற்றாக விரைவில் தற்காலிக பேருந்து நிலையங்கள்” – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
பிராட்வே பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படுவதால், பயணிகள் சிரமப்படாமல் இருக்க தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5-வது மண்டல அலுவலகக் கூட்டரங்கில் இன்று, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரான சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிராட்வே மற்றும் தங்கசாலை வள்ளலார் நகர் பேருந்து நிலையங்களில் நடைபெறும் கட்டுமான பணிகள் காரணமாக, தற்காலிக நிலையங்களில் இருந்து எம்டிசி பேருந்துகளை இயக்குவது மற்றும் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து துறைசார் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“75 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பிராட்வே பேருந்து நிலையத்தை, தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியின்படி, ரூ.870 கோடி மதிப்பீட்டில், அனைத்து நவீன வசதிகளுடனும் மறுசீரமைத்துக் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதனால், தற்போதைய கட்டிடங்கள் இடிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த நிலையம், புதுப்பிக்கும் காலத்தில், ராயபுரம் கிளைவ் பேக்டரி அருகிலும் தீவுத்திடலிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
அதேபோல், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வள்ளலார் நகர் பேருந்து நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளது. அங்கு தினசரி சுமார் 400 பேருந்துகள் இயக்கப்படுவதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல், மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள 1 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பகுதியும், டான்சிக்கு சொந்தமான 1.50 ஏக்கர் நிலப்பகுதியும் தற்காலிக பேருந்து நிலையமாக பிரித்து பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் தொடங்கப்படும். முதல்வரின் அனுமதி பெற்று, பயணிகளுக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட தற்காலிக நிலையங்கள் உருவாக்கப்படும்,” என அமைச்சர் கூறினார்.
இக்கூட்டத்தில், மேயர் பிரியா, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சிஎம்டிஏ செயலாளர் பிரகாஷ், எம்டிசி மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.