இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை – அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்குவிழா

இந்தியாவில் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட முதல் அறக்கட்டளையான தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 333 வன காவலர்கள் மற்றும் வனவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, கடலோர சூழல் அமைப்புகளை பாதுகாக்கவும், நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கவும் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளையின் இலச்சினை மற்றும் சிறப்பு வெளியீட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், நிலையான வளர்ச்சியும் நோக்கமாகக் கொண்ட மணலி–எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் அமைப்பு மன்றத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். அதோடு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான 2024–2025 கல்வியாண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,

“காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளை சரியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நம்மிடம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, கடல் வளங்களை நீடித்த முறையில் மேலாண்மை செய்யும் வகையில் இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழிற்சாலை பகுதிகளில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தீர்க்க மணலி–எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் அமைப்பு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலப்பரப்பு, பசுமை வளங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை பாலைவனமாகாமல் காப்பதே நமது அரசின் நோக்கம். பல்லுயிர் பல்வகைமையில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் வனத்துறையின் பொறுப்பில் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றார்.

முன்னதாக அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,

“படித்தவர்களுக்கு தரவரிசை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் பணி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வெளிப்படையாக நடந்து வருகிறது. தேர்வாணையம் வழியாக தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் இடைத்தரகர்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்திற்கு ஏராளமான தொழில்கள் வந்து கொண்டிருக்கின்றன; இதன் மூலம் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மக்கள் நலனுக்காக தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது,” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, வனத்துறை தலைமை ஆணையர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ராகுல்நாத், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எம். ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box