காஞ்சிபுரம் டிஎஸ்பியை சிறையில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து – விரிவான விசாரணை அறிக்கை கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து 15 நாள் சிறை காவலில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சம்பவம் குறித்த முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் தனது பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பட்டியலினத்தவர் கடையில் கேக் வாங்கி சாப்பிட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் கடை உரிமையாளர் சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, சிவக்குமாரின் மருமகனான லோகேஷ் (32), மாவட்ட நீதிபதியின் பாதுகாப்பு காவலராக இருந்தவர், முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் முருகனின் மனைவி பார்வதி அளித்த புகாரின் பேரில், சிவக்குமார், லோகேஷ் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டதால், மாவட்ட நீதிபதி செம்மல், வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து 15 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்ற விசாரணை:

இந்த உத்தரவை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், “மாவட்ட நீதிபதி செம்மலுக்கும், அவரது பாதுகாப்பு காவலராக இருந்த லோகேஷுக்கும் முன்விரோதம் இருந்ததால், பழி வாங்கும் நோக்கில் இவ்வாறு நடந்திருக்கிறது. உண்மையில் இருதரப்பும் சமரசமாகி வழக்கு முடிவுற்றிருந்தது. ஆனால், நீதிபதியின் அழுத்தத்தால் மீண்டும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது” என்று வாதிட்டார்.

லோகேஷின் வழக்கறிஞர் சரத்சந்திரனும், “அவர்களை ஊரைவிட்டு நீக்க உத்தரவிட்டது சட்ட விரோதமானது” என்று கோரிக்கை வைத்தார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார்,

“டிஎஸ்பியை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு அபூர்வமானது. இத்தகைய உத்தரவை வழங்குமுன் நிர்வாக அனுமதி பெற வேண்டியது அவசியம். மேலும், முன்விரோதம் காரணமாக காவலர் லோகேஷ் மற்றும் அவரது மாமா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இவ்விரு உத்தரவுகளையும் ரத்து செய்கிறேன்.

டிஎஸ்பி சங்கர் கணேஷை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

விசாரணை அடுத்த செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box