பாமக பெயர் மற்றும் சின்னம் வழக்கு – ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பெயர் மற்றும் சின்ன உரிமை தொடர்பாக, கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி. முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதனை அன்புமணி ராமதாஸ் எதிர்த்து பேசினார். அதிலிருந்தே தந்தை – மகன் இடையே விரிசல் தொடங்கியது.

பின்னர் வன்னியர் சங்க மாநாட்டில் ராமதாஸ், “பாமக-வில் பிரிவுகள் உருவாகிவிட்டன” என குறிப்பிட்டு, அன்புமணியை செயல் தலைவராக அறிவித்தும், “நான் தான் கட்சித் தலைவர், தேர்தல் முடிவுகளை நானே எடுப்பேன்” எனவும் அறிவித்தார்.

அன்புமணி “தந்தை கோபமாக இருந்தால் மன்னிப்பு கேட்பேன்” என தெரிவித்தும், ராமதாஸ் சமரசம் செய்ய மறுத்தார். மேலும், அன்புமணி தனது பெயரை கட்சியில் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தார். இதன் பின்னர் இரு தரப்பும் தனித்தனியாக நிர்வாகிகளை நீக்கி, புதியவர்கள் நியமித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடத்தவிருந்த பொதுக்குழு கூட்டத்தை தடுக்க ராமதாஸ் தரப்பின் பொதுச் செயலாளர் முரளிசங்கர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அந்த கூட்டத்திற்கு தடை இல்லை என உத்தரவிட்டது.

இதனையடுத்து, முரளிசங்கர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர் வி.எஸ். கோபு (சமூகநீதிப் பேரவை மாநில தலைவர்) இதை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுக்களில், அன்புமணி தரப்பு பாமக பெயர், மாம்பழம் சின்னம் அல்லது கட்சி அலுவலக முகவரி குறித்து நீதிமன்றத்தில் மனு செய்தால், தங்கள் கருத்து கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என கோரப்பட்டுள்ளது.

Facebook Comments Box