உயிரிழக்கும் நிலையில் இருந்த 2 வயது குழந்தையை காப்பாற்றிய சிறப்பு எஸ்.ஐ – காவல் ஆணையரின் பாராட்டு
திடீர் உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடிய 2 வயது சிறுவனை, அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிரைக் காக்க உதவிய சிறப்பு எஸ்.ஐ-யை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னையின் திருவொற்றியூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 26ஆம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறைதீர் முகாம் நடந்தது. அந்த முகாமில் கலந்துகொண்ட வினோத்குமார் என்பவரின் 2 வயது மகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி செய்தும், சிறுவனின் நிலைமை மேம்படவில்லை.
அப்போது அங்கு பணியில் இருந்த தொற்றுநோய் மருத்துவமனை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ மாரிதுரை விரைந்து நடவடிக்கை எடுத்தார். குழந்தையை தூக்கிக் கொண்டு பொதுமக்களின் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் விரைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனது தைரியம் மற்றும் சாமர்த்தியத்தால் குழந்தை உயிர் பிழைத்ததாகக் கூறி, சிறுவனின் குடும்பத்தினர் எஸ்.ஐ மாரிதுரையை பாராட்டினர்.
இந்த தகவலை அறிந்த காவல் ஆணையர் அருண், நேற்று மாரிதுரையை நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி கௌரவித்து பாராட்டினார்.