கடலூர் சிப்காட் விபத்துகள் – வெள்ளை அறிக்கை அவசியம்: ராமதாஸ் வலியுறுத்தல்

கடலூர் சிப்காட் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 5-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில், நச்சுப் புகை வெளியேறி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 90 பேர் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம் போன்ற பாதிப்புகளுக்குள்ளாகினர். இதே தொழிற்சாலையில் 2021-ஆம் ஆண்டு பாய்லர் வெடித்து 4 உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிப்காட் தொடங்கிய காலம் முதலே அடிக்கடி விபத்துகள், நச்சு வாயு கசிவுகள் ஆகியவை நடப்பதால் பச்சையாங்குப்பம், சங்கொலிக்குப்பம், குடிகாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் அச்சத்தில் வாழ்கின்றனர். தொழிற்சாலை கழிவுகள் ஆறுகள், நீரோடைகளில் கலப்பதால் நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் வருவாய் ஈட்டியவர்கள் இப்போது தொழிற்சாலைகளில் சிறு வேலைகளுக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

2021 விபத்துக்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆய்வு செய்ய குழு அமைக்க உத்தரவிட்டாலும், அதன் முடிவுகள் வெளிப்படுத்தப்படவில்லை. பின்னர் 2023, 2024 மற்றும் 2025-இல் கூட விபத்துகள் நடந்துள்ளன.

பெரிய விபத்துகள் நேரும் போதுதான் அதிகாரிகள் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் சிறிய விபத்துகள், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து சீரான கண்காணிப்பு, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும், அபாயகரமான ரசாயனங்கள் குறித்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் முன்கூட்டியே தகவல் வழங்கப்படாததால், சிகிச்சை தாமதம் உயிர்களுக்கு ஆபத்தாகிறது.

எனவே:

  • விபத்துகள் நேரும் பொழுது அபாய எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்கப்பட வேண்டும்.
  • தொழிற்சாலை பணியாளர்கள், அருகிலுள்ள கிராம மக்கள், பொதுமக்கள் என மூன்று நிலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
  • சுற்றுச்சூழல் பாதிப்பு, நோய்கள் ஆகியவை குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு தொழிற்சாலையும் வெளியேற்றும் ரசாயனங்கள், வாயுக்கள், கழிவுகள் குறித்து வெளிப்படையாக கண்காணிப்பு செய்து கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Facebook Comments Box