சென்னை: ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிவானந்தா சாலையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில், சங்க மாநில தலைவர் கே. பழனிசாமி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன் கூறுகையில், “2021 தேர்தல் அறிக்கையில் அரசு பணியாளர் அந்தஸ்து, காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. ஆனால், நான்கரை ஆண்டுகள் கடந்தும், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மாதம் ரூ.2,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது” என்றார்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்குதல், அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், பண்டிகை முன்பணம், மருத்துவ காப்பீடு, நல நிதி உள்ளிட்ட 10 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.