ரேபரேலியில் ராகுல் காந்தியை பாஜகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் – செல்வப்பெருந்தகை கண்டனம்

உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி செல்லும் வழியில் பாஜகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்தத் தொகுதிக்குச் செல்லும் போது, பாஜக ஆதரவாளர்கள் அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்தது, ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இது சாதாரண அரசியல் தகராறு அல்ல; மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் பாசிசச் செயலாகும்.

இந்த சம்பவத்தில் மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் நேரடியாகக் கலந்து கொண்டிருப்பதும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பின்னணியில் இருப்பதும் மிகப்பெரிய சதி என்பதை காட்டுகிறது. மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ராகுல் காந்தியின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல், பாஜக அரசியல் அடக்குமுறைக்கும், பயங்கரவாதத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.

மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் இந்திய ஜனநாயகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது, நாட்டின் ஜனநாயக மரியாதையை மிதிக்கிறது. மக்கள் இதை கவனமாகக் கண்டு வருகின்றனர்; இதை அவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

இது எச்சரிக்கை மணி அல்ல, போராட்ட மணி. ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு நகரமும் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக எழுச்சி குரல் கொடுக்கும். மக்களின் சக்தியால் பாஜகவின் அடக்குமுறை சிதைந்து போகும்; ஜனநாயகம் மீண்டும் உயிர் பெறும்.

மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்யநாத் ஆகியோர் எவ்வளவு முயன்றாலும், மக்களின் தீர்ப்பே அவர்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் நெருப்பாக எழுந்து பாசிசத்தைக் களையத் தவறாது” என்று அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments Box