“விஜய் பிரச்சாரம்: 23 நிபந்தனைகள் – மரம் ஏறக் கூடாது, 30 நிமிடம் மட்டுமே பேச்சு”

திருச்சியில் தவெக தலைவர் விஜய் நடத்தும் பொதுக்கூட்ட பிரச்சாரத்துக்கு, மாநகர காவல் துறை 23 விதிமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நடைபெறும் கூட்டத்திற்காக, தவெக நிர்வாகிகள் அனுமதி கோரியிருந்தனர். இதனை பரிசீலித்த போலீசார் பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளனர்.

அதன்படி, விஜய் அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாற்ற வேண்டும். அவர் சென்னையிலிருந்து வரும்போது புறவழிச்சாலை – டிவிஎஸ் டோல்கேட் – தலைமை தபால் நிலையம் – பாலக்கரை – காந்தி மார்க்கெட் வழியாக வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். எனினும், ‘ரோடு ஷோ’க்கு அனுமதி இல்லை. விஜய்யுடன் அதிகபட்சம் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கூட்டத்தில் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தையும் கட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள் கூட்டத்துக்கு வரக் கூடாது. தொண்டர்கள் கொடியை நீளமான குச்சிகளில் ஏந்தக் கூடாது. மேலும், உயரமான கட்டடங்கள் மற்றும் மரங்களில் ஏறி நிற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

விஜய் வருகையின்போது பட்டாசு வெடிக்கக் கூடாது, மேளதாளம் இசைக்கக் கூடாது, அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. வாகன நிறுத்தும் வசதியையும் கட்சியினரே ஏற்பாடு செய்ய வேண்டும். இவற்றை உள்ளடக்கிய 23 நிபந்தனைகளுக்கு தவெக நிர்வாகிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

Facebook Comments Box