பொள்ளாச்சியில் விவசாய, தொழில் அமைப்புகளுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாய மற்றும் தொழில் துறை அமைப்புகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் பழனிசாமி, இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசாரம் செய்தார். அதற்கு முன்னதாக, தனியார் விடுதி மண்டபத்தில் பல்வேறு அமைப்புகளுடனான கலந்துரையாடல் நடந்தது.

  • கைத்தறி நெசவாளர்கள் சங்கம்: கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் அமைத்தல், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தல், பொள்ளாச்சியில் கைத்தறி பூங்கா அமைத்தல்.
  • பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
  • ஈழுவ-தீய சமூகம்: ஓபிசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம்: ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்துதல், தென்னை நல வாரியம் அமைத்தல்.
  • தமிழ்நாடு போயர் மக்கள் கூட்டமைப்பு: போயர் சமூக நல வாரியம் உருவாக்குதல், கிருஷ்ண போயருக்கான மணி மண்டபம் அமைத்தல்.
  • விநாயகா தென்னை உற்பத்தி நிறுவனம்: பிஏபி பாசன திட்டத்தில் சேர்க்கப்படாத பகுதிகளுக்கு நீர் வழங்குதல், கோதவாடி குளத்திற்கு பிஏபி தண்ணீர் வழங்குதல், தேவம்பாடி குளத்தை சுற்றுலா பகுதியாக அறிவித்தல்.
  • ஆழியாறு பாசன சங்கம்: வாய்க்கால் பராமரிப்பில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்யுதல்.
  • பால் உற்பத்தியாளர்கள் சங்கம்: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பால் விலையை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.50 என நிர்ணயம் செய்தல், தீவனத்திற்கு 50% மானியம் வழங்குதல்.
  • தமிழ்நாடு கள் இயக்கம்: தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளித்தல், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது.

இந்தக் கலந்துரையாடலின் போது, கள் இறக்க அனுமதி குறித்து ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் சமாதானப்படுத்தப்பட்டார்.

பின்னர் பழனிசாமி உரையாற்றுகையில்:

“அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் பசுமை வீடுகள் திட்டம் தொடரும். பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்கும் கோரிக்கை வந்துள்ளது. ஒரு புதிய மாவட்டத்துக்கு ரூ.500 கோடி செலவாகும். அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயக்கட்டு பகுதிகளில் நிலங்கள் மனைகளாக விற்பனை செய்யப்பட்டிருப்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். பாசனநீரை முழுமையாக பயன்படுத்தும் வழி செய்யப்படும். அத்திக்கடவு-அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியிலேயே மாநில நிதியில் நிறைவேற்றப்பட்டது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் சுத்தம் செய்யப்படும்.

கால்நடைத் துறையை மேம்படுத்த, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. ஆனைமலை நல்லாறு திட்டம் குறித்தும் அதிமுக ஆட்சியில் பல முன்னெடுப்புகள் நடந்தன. ஆனால் திமுக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை.

பல்வேறு அமைப்புகளிடம் வந்த மனுக்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படும்” என்றார்.

Facebook Comments Box