திருவாரூர் டிஎஸ்பிக்கு எதிரான போராட்ட மனு நிராகரிப்பு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, டிஎஸ்பி மணிகண்டனுக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனுவை, இந்து முன்னணி திருவாரூர் நகரத் தலைவர் ஜி. செந்தில்குமார் தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த ஆகஸ்ட் 29 அன்று 36-வது ஆண்டாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலத்தின் போது, காவல்துறையின் வழிகாட்டுதலுடன் அமைதியாக நடந்த நிகழ்ச்சியில், டிஎஸ்பி மணிகண்டன் திட்டமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், சிறார்கள் உள்ளிட்டோரின் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஊர்வல தேர் மற்றும் சாமி சிலையையும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், டிஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் கே. எம். டி. முகிலன் தரப்பில் ஆஜராகி, ஊர்வலத்திற்கு மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அது இரவு 7.45 மணிக்கு துவங்கி அதிகாலை 4.30 மணி வரை நீடித்ததாக தெரிவித்தார். மேலும், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் மதுபோதையில் இருந்ததால் தகராறு ஏற்பட்டது, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காவல்துறை தலையிட்டது என்றும் கூறினார். சாமி சிலை மற்றும் ஊர்வல தேரை காவல்துறையினர் சேதப்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவற்றை பரிசீலித்த நீதிபதி, டிஎஸ்பிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Facebook Comments Box