பாஜக காரணமாக பாமக, அதிமுகவில் பிளவு: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தமிழகத்தில் பாஜக காரணமாகவே பாமக மற்றும் அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும், தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பரமக்குடியில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு நாளை முன்னிட்டு, செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் பேசிய செல்வப்பெருந்தகை,
“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தியாகி இமானுவேல் சேகரனுக்காக தபால் தலை வெளியிடப்பட்டது. தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியின் பேரில் மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கட்சிகள் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தாமல் வாக்குறுதிகளைப் பகிர்ந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தேவேந்திர குல மக்களுடன் காங்கிரஸ் பேரியக்கம் உறவாடி இருக்கிறது. இமானுவேல் சேகரன் காங்கிரஸ் கட்சியில் இருந்தே பாடுபட்டவர். மத்தியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, ராகுல் காந்தி பிரதமராக ஆனவுடன், அவரை இங்கு அழைத்து வருவோம்.
பிரித்தாளும் கொள்கை பாஜகவுக்கு மட்டுமே உண்டு. அதுவே பாமகவில் தந்தை–மகன் மோதலுக்கும், அதிமுகவில் செங்கோட்டையன் பிரிவினைக்கும் காரணம். ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
பாஜக எங்கு சேர்ந்தாலும் அங்கு சிக்கல்கள் தோன்றுகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மதுரை விமான நிலையப் பெயர் தொடர்பாக மவுனமாக இருந்த பாஜக, இன்று பேசுவது வெறும் வாக்கு அரசியலாகும். இது சந்தர்ப்பவாத அரசியல்” எனக் கூறினார்.