‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக பள்ளி விடுமுறை தவறு: அமைச்சர் அன்பில் மகேஷ்
உப்பிலியபுரம் அருகே அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியது தவறு தான், இனி இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழ அனுமதிக்க மாட்டேன் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “முன்னாள் முதல்வர் பழனிசாமி, முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது வருந்தத்தக்கது. யாராக இருந்தாலும் அரசியலில் மரியாதை மற்றும் நாகரிகம் அவசியம். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்னும் துணை முதல்வர் உதயநிதி தொடங்கவில்லை.
ஆனால் அதற்கு முன்பே அவர் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்க்கட்சியினர் விவாதப்பொருளாக்கி வருகின்றனர். இதன் மூலம் உதயநிதி, எதிர்க்கட்சியினருக்கு அச்சம் உண்டாக்கியிருக்கிறார்.
உப்பிலியபுரம் அரசு பள்ளியில், விடுமுறை அறிவித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தியதாக தகவல் வந்தது. விசாரணையில், மாவட்டக் கல்வி அலுவலர் தனிப்பட்ட முறையில் அனுமதி வழங்கியதாக தெரியவந்தது. ஏற்கனவே பள்ளிகளில் போதிய பாடநாள் இல்லாத நிலையில், இப்படிப்பட்ட தவறுகள் நடக்கக் கூடாது. இனி இதுபோன்ற தவறு நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.