“தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் தளம்கொள்வதற்கான முயற்சி” – பிருந்தா காரத் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களை உறுதி செய்வதற்குப் பதிலாக நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் விமர்சித்தார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் பாரதியாரின் 104வது நினைவு தினத்தையொட்டி, அவருடைய சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பிருந்தா காரத் பேசியதாவது:

“பாரதியார் பன்முகத்தன்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய இலக்குகளை காக்க போராடியவர். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, இன்று நாட்டை ஆளும் சக்திகள் பன்முகத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் விரோதமாக செயல்படுகின்றன. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தற்போது தமிழகத்தில் நிலைகொண்டுவிட முயல்கின்றன. அரசியல் சட்டம், நாடாளுமன்ற விதிகள், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாகவே இவை செயல்படுகின்றன. தமிழக மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள்; அவர்கள் கண்டிப்பாக இந்த சக்திகளை தோற்கடிப்பார்கள்.

சாதிய அடிப்படையிலான கொலைகளை தடுக்கும் விதமாக தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம். மக்களுடன் இணைந்து செயல்பட்டு, பாஜக–ஆர்எஸ்எஸ் அமைப்புகளை வெல்லுவதே எங்கள் நோக்கம். இண்டியா கூட்டணி வலுவாக இயங்குகிறது.

பிஹாரில் தேர்தல் முறையை முற்றிலும் சீர்குலைக்க முயற்சிகள் நடந்தன. அது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தை நினைவூட்டுகிறது. தேர்தல் ஆணையத்தின் அந்த நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. இன்று தேர்தல் ஆணையம் வாக்காளர்களை பாதுகாப்பதற்குப் பதிலாக நீக்கும் நிறுவனமாக செயல்படுகிறது. இதற்கு எதிராக இண்டியா கூட்டணி ஒருமித்துப் போராடுகிறது” என்றார்.

இடதுசாரிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறது என்ற கேள்விக்கு, “நீங்கள் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பி. எண்ணிக்கையை வைத்து பேசுகிறீர்கள். ஆனால் மக்களிடையே இடதுசாரி சிந்தனை அதிகரித்துக்கொண்டே வருகிறது; முன்பை விட இப்போது வலுவாக வளர்கிறது” என்று அவர் பதிலளித்தார்.

தொழிற்சங்கங்களின் போராட்டம் திமுகக்கு எதிரானதா என்ற கேள்விக்கு, “அது யாருக்கும் எதிராக அல்ல; தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டம். மக்களின் உரிமைக்காக போராடுவது கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை இயல்பு” எனவும் பிருந்தா காரத் விளக்கமளித்தார்.

Facebook Comments Box