‘டெட்’ தேர்வு தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு – தமிழக அரசின் தீர்மானம்

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்வதற்கு ‘டெட்’ தகுதி அவசியமாக்கப்பட்டது. 2011 முதல் தமிழகத்தில் இதை நடைமுறைப்படுத்தி, அதன்படி நியமனங்கள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களும் ‘டெட்’ தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனால், சுமார் 1.5 லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநில அரசு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையும், ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்டறிந்தது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். புதிய நியமனங்களுக்கு ‘டெட்’ கட்டாயம் என்பதை அரசு உறுதியாக ஆதரிக்கிறது. ஆனால் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அதை பின்னோக்கி பயன்படுத்துவது நியாயமன்று.

பல ஆண்டுகளுக்கு முன் நிலவிய சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்போது அவர்களிடம் புதிய தகுதியை கட்டாயப்படுத்துவது ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஓய்வுக்கு தள்ளும். இதனால் பள்ளிகளில் பேரளவு ஆசிரியர் பற்றாக்குறை உருவாகும் அபாயம் உள்ளது.

மேலும், குறுகிய காலத்தில் இத்தனை ஆசிரியர்களுக்கு மாற்றாக ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களை நியமித்து பயிற்சி அளிப்பது சாத்தியமற்றது. இது மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் நிலையை உருவாக்கும்.

2009 கல்வி உரிமைச் சட்டம், குறைந்தபட்ச தகுதி விதிகள் புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு கட்டாய ஓய்வை அந்தச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. 2010-ல் டெட் அறிமுகப்படுத்தப்பட்டபோது கூட, அதற்கு முன் பணியில் இருந்தவர்களுக்கு விதிகள் பொருந்தாது என்று தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவித்தது.

எனவே, டெட்டை பின்னோக்கி அமல்படுத்துவது, சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கும் செயல். அவர்களின் நலன்களையும், எதிர்கால நியமனங்களில் கல்வித் தரத்தையும் பாதுகாக்கும் வகையில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

மாணவர்களின் கல்வி தரமும், ஆசிரியர்களின் நியாயமும் ஒருங்கே காக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box