“பட்டியல் விலக்கு தான் தேவேந்திரர் குறிக்கோள்” – சீமான்

ராமநாதபுரம், பரமக்குடியில் நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு நாளில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

“தமிழரிடையே உயர்வு–தாழ்வு இல்லை; தாழ்வு என்றே சொன்னால் யார் தாழ்த்தினான் என்ற கேள்வி எழும். அதற்கு எதிராகவே இமானுவேல் சேகரன் போராடினார். சாதியில்லா சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

‘பட்டியல் விலக்கு தான் தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்துடன் நாங்கள் அதிகாரப் போராட்டத்தில் இருக்கிறோம். அரசு மக்களின் பிரச்சினைகளை கவனிக்காதபோது, மக்கள் தாமே அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. தேவேந்திர சமூகத்தை பட்டியல் இழிவிலிருந்து விடுவிப்பதே எங்கள் உறுதி. அதற்காக தமிழகம் எங்களை வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும்.

மற்ற கட்சிகளின் உள்ளக பிரச்சினைகளில் தலையிடுவது சரியல்ல. நாட்டில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து பேசினால் அதைத் தவறாகக் கருதக் கூடாது. அடக்குமுறையைக் கடைப்பிடிக்கும் அரசை ஏற்றுக்கொள்கிற மக்களே குற்றவாளிகள் என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இப்போது தமிழக மக்கள் போராடியே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் குப்பை அகற்றும் ஒப்பந்தம் வெளிமாநிலத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ குப்பை அகற்ற ரூ.12, கழிவறை சுத்தம் செய்ய ரூ.350 என்ற கட்டணத்தில் மாதத்திற்கு ரூ.270 கோடியை இடைத்தரகர் மூலம் அரசு கொள்ளையடிக்கிறது. குப்பையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

நான் முதலவரானால் கச்சத்தீவை மீட்பேன். ஆனால், 2024 தேர்தலில் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்போம் என்று சொன்னார்; பின்னர் அமைதியாகிவிட்டார். கச்சத்தீவை காங்கிரஸ் கொடுத்தது, திமுக பார்த்துக்கொண்டது. தேர்தல் வாக்குறுதி மட்டும் தொடர்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து விரைவில் நெய்தல் பயணத்தில் பேசுவேன். நான் வாக்கு அரசியலுக்காக அல்ல, மக்களின் வாழ்வுக்காகவே அரசியல் செய்கிறேன்” என்றார் சீமான்.

Facebook Comments Box