16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காததால் அன்புமணி நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

பாமக செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணிக்கு சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பொதுக்குழுவில், தனது பேரன் முகுந்தனை (காந்தியின் மகன்) இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கவுள்ளதாக ராமதாஸ் அறிவித்தார். அதற்கு அப்போதே கட்சித் தலைவர் அன்புமணி மேடையில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மைக்கை மேஜை மீது வீசியும் கலகம் செய்தார். இதன் பின்னர் தந்தை-மகன் இடையேயான முரண்பாடு அதிகரித்தது.

ஏப்ரல் மாதம் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், தலைவர் பொறுப்பை தானே ஏற்று, செயல் தலைவராக அன்புமணியை நியமிப்பதாகவும் ராமதாஸ் அறிவித்தார். பின்னர், அன்புமணி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரின் 3 ஆண்டு தலைவர் பதவி மே 28-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இரு முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்காததால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக ராமதாஸ் கூறினார்.

“கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட அன்புமணி, தலைமைக்கு கீழ்ப்படையாமல் தனிச்செயல்கள் செய்து வருகிறார். அவரது செயல்கள் பாமக வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. எனவே, செயல் தலைவர் பதவியிலும், அடிப்படை உறுப்பினர் நிலைமையிலிருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது; மீறினால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விரும்பினால் அவர் தனியாக கட்சி தொடங்கலாம். ஆனால் என் பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது” என ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், அன்புமணி தன்னை உளவு பார்க்க ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தியதாக குற்றஞ்சாட்டிய ராமதாஸ், “அடுத்த செயல் தலைவர் குறித்து பின்னர் அறிவிக்கிறேன். மகளை முன்னிறுத்தும் நோக்கில் மகனை புறக்கணிக்கிறேன் என்பதும் பொய்யான குற்றச்சாட்டு” என்றார்.

ராமதாஸுக்கு நீக்க அதிகாரமே இல்லை – வழக்கறிஞர் பாலு

இந்த விவகாரம் தொடர்பாக பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் க. பாலு கூறியதாவது: “கட்சி சட்டப்படி பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் நிறுவனருக்கு இல்லை. அது பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளருக்கு மட்டுமே உண்டு. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விதிமீறல். எனவே, அன்புமணியே கட்சித் தலைவராக தொடர்கிறார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்ட தீர்மானத்தின் படி, தேர்தல் ஆணையம் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளது. அன்புமணி உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டு தவறானது. அவர் அப்படிப்பட்டவர் அல்ல” என்று தெரிவித்தார்.

Facebook Comments Box