சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்பா? – மநீம நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சித் தோழர்களுடன் ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
2024 மக்களவைத் தேர்தலில் மநீம, இண்டியா கூட்டணியில் இடம்பிடித்தது. அப்போது, அந்தக் கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதாக திமுக உறுதியளித்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து, அவர்கள் வெற்றிக்கு வலு சேர்த்தார்.
சமீபத்தில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி. பதவியேற்றதைத் தொடர்ந்து, மநீம தனது கவனத்தை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திருப்பியுள்ளது. அதன்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர் 18 முதல் 21 வரை நான்கு நாட்கள் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னையின் முத்தமிழ் பேரவை அரங்கில் காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக, மண்டல வாரியாக கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் 61 தொகுதிகளில் மநீமவுக்கு செல்வாக்கு இருப்பதால், சில தொகுதிகளில் கட்சி போட்டியிடலாம் என்ற விருப்பத்தை நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.