சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘மதிப்புச்சுவர்’ திறப்பு — செப்.30

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், மூளைச்சாவுக்குப் பிறகு உடலுறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட “மதிப்புச்சுவர்” வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று தெரிவித்ததாவது:

சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 139-இல் உள்ள மயானத்தில் மேம்பாட்டுப் பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மயானங்களிலும், குறிப்பாக எரிவாயு தகன மேடைகளை புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள இரண்டு எரிவாயு தகன மேடைகள் புதிதாக கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மயானத்தில் மாதந்தோறும் சுமார் 100 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்படுகின்றன. மேலும், பசுமை வளம் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பூங்கா போன்று மயானங்களை உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன” என்றார்.

ரூ.94.83 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளில் சிமென்ட் கான்கிரிட் சாலை அமைத்தல், இன்டர்லாக்கிங் லான்ட்ஸ்கேப்பிங், குளியல் அறை, கழிப்பறை, சுற்றுச்சுவர் உயர்த்துதல் போன்றவை அடங்கும்.

அவர் மேலும் கூறுகையில்: “மூளைச்சாவுக்குப் பிறகு உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2024 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல்வர் அறிவித்தார். இதுவரை 513 தானதாரர்களிடமிருந்து உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. அவர்களை கௌரவிக்கும் வகையில் முதல்வரின் ஆலோசனையின் பேரில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மதிப்புச்சுவர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தானம் செய்தோரின் பெயர்கள் கல்வெட்டாக பொறிக்கப்படும்.

அமெரிக்கா-வியட்நாம் போரில் உயிர்நீத்தவர்களின் பெயர்கள் வாஷிங்டனில் சுவரில் கல்வெட்டாக பதிக்கப்பட்டுள்ளதைப் போல, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மதிப்புச்சுவர் அமைக்கும் பணி நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தானம் செய்தோரின் பெயர்கள் அந்தந்த அரசு மருத்துவமனை சுவர்களில் நிலைத்திருக்கும்” என தெரிவித்தார்.

Facebook Comments Box