மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
திருவேற்காடு வீரராகவபுரத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் 300-க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெறுகின்றனர். மற்ற நாட்களில் 200-க்கும் மேலானோர் மருத்துவ உதவிக்காக வருகின்றனர்.
ஆவடி–பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ளதால், திருவேற்காடு நகராட்சி மக்களோடு மேல்பாக்கம், கண்ணப்பாளையம் போன்ற சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் எளிதில் வந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு ரூ.1.20 கோடி செலவில் வீரராகவபுரத்தில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென அந்தத் திட்டம் புளியம்பேடு பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு புதிய மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல ஆண்டுகளாக வீரராகவபுரத்தில் சேவை செய்துவந்த மருத்துவமனை மூடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வீரராகவபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யாமல், மக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து இயங்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.