பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல டிஜிபி உத்தரவு
பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் எவ்வித இடையூறும் இன்றி செல்வதை உறுதிசெய்ய காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி தாக்கல் செய்த மனுவில், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வேலூரில் பிரச்சாரம் செய்தபோது, நோயாளி சந்திராவை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் கூட்டம் நடந்த இடத்தைக் கடந்தது. அப்போது பழனிசாமி, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டுநரே நோயாளியாக வாகனத்தில் சேர்வார் என மிரட்டினார்.
இதற்குப் பிறகு ஆகஸ்ட் 24-ஆம் தேதி திருச்சியில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை எடுத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தபோது, அங்கிருந்த சிலர் ஓட்டுநரைத் தாக்கி வாகனத்தை சேதப்படுத்தினர். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரையாவது போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மிகுந்த போக்குவரத்து உள்ள பிரதான சாலைகளில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. தவிர்க்க முடியாத சூழலில் அனுமதி அளிக்கப்படும் போது, போதுமான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சாலையோரம் அல்லது சந்திப்பு இடங்களில் கூட்டம் நடைபெறும்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களைத் தவிர்க்க போதுமான காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, மீட்பு வாகனங்கள், காவல் மீட்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் தடையின்றி செல்ல முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவற்றுக்கான பாதைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், பெரிய அளவில் கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் நடைபெறும்போது அருகிலுள்ள மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்புப் படையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசு தரப்பின் வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் 15-க்கு ஒத்திவைத்தனர்.