காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து, வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதைச் சார்ந்த விளம்பரங்கள் 10 நாளிதழ்களில் வெளியிடப்பட்டன.

அந்த விளம்பரச் செலவான 33 லட்சம் ரூபாய் தொகை தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படவில்லை என்ற காரணத்தால், 2021-இல் தேர்தல் ஆணையம் அசன் மவுலானாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர், 2023-இல் மீண்டும் தேர்தல் செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்யாததால் தகுதி நீக்கம் செய்யக் கூடாது எனக் கேட்டு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஆகஸ்ட் 14 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, 2023-இல் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யவும், அதற்கு தடை விதிக்கவும் அசன் மவுலானா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தில் வாக்கு முறைகேடு குறித்த புகாரை வெளிச்சமிட்டதால் பழிவாங்கும் நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்எல்ஏ அசன் மவுலானா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் வாதிடுகையில், ராகுல் காந்தி அனைத்து 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தார். அதற்கான விளம்பரச் செலவுகளை காங்கிரஸ் கட்சியே ஏற்றுக்கொண்டது. எனவே, கட்சி சார்பாகச் செய்யப்பட்ட செலவுகளை தனி வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கக்கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இன்னும் 10 மாதங்களில் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினார். இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box