கடலூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவிப்பு
தமிழகத்தில் முந்திரி உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த “தமிழ்நாடு முந்திரி வாரியம்” நிறுவப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 2025–26 வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, ரூ.10 கோடி நிதியுடன் மாநில அளவிலான முந்திரி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வாரியம் கடலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இதில்:
- துறை அமைச்சர் – வாரியத் தலைவர்
- அரசு பிரதிநிதி – துணைத் தலைவர்
- வேளாண்மை உற்பத்தி ஆணையர் – செயலர்
- துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
மேலும், வேளாண்மை உற்பத்தி ஆணையர் தலைமையில் ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், தொழிலாளர்களின் நலன் போன்ற விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
தற்போது தமிழகத்தில் உற்பத்தியாகும் முந்திரி, தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருப்பதால், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து முந்திரிக் கொட்டைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதை மாற்றி, முந்திரியில் தன்னிறைவு பெறுவதே புதிய வாரியத்தின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரியம் மேற்கொள்ளும் முக்கிய பணிகள்:
- அதிக மகசூல் தரும் புதிய ரகங்கள் அறிமுகம்
- இயந்திர தொழில்நுட்பங்கள், பூச்சி-நோய் மேலாண்மை ஆலோசனை
- விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்
- முந்திரி பதப்படுத்தும் நிலையங்களுக்கு நிதி மற்றும் திட்ட ஆலோசனை
- சேமிப்பு வசதிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு
இதன் மூலம், முந்திரிச் சாகுபடி விரிவு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் முந்திரித் தொழிலின் நிலையான வளர்ச்சி சாத்தியமாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.