தமிழகத்தில் மேக்ஸி கேப்கள் மினி பேருந்துகளாக மாற்றம் – அரசின் தீர்மானம்
தமிழக அரசு, மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஊரகப் பகுதிகளில் போக்குவரத்து வசதி மேம்பட, மினி பேருந்து திட்டம் கடந்த ஜூன் மாதம் புதுப்பித்து அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சுமார் 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். தேவைக்கு குறைந்தது 5,000 மினி பேருந்துகள் தேவைப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட தனியார் மேக்ஸி கேப்கள் மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்துக்காக பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக, பொதுப் போக்குவரத்து வாகனங்களின் குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ.யில் இருந்து 200 செ.மீ. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இவ்வகை வேன்களில் பயணிகள் நின்று செல்ல அனுமதி இல்லை. இந்த முயற்சியால் மலை கிராமங்கள் உட்பட ஊரக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதி கிடைக்கும். இதை விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மினி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்ததாவது: மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ள நிலையில், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நஷ்டம் அதிகரித்துள்ளது. புதிய உரிமங்கள் வழங்கப்படாததால், சுமார் 2,000 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலர் வாகனத்தை விற்று தொழிலையே விட்டு சென்றுள்ளனர்.
மேலும், மினி பேருந்துகளுக்கான வீல் பேஸ் 3,900 மி.மீ. இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அத்தகைய பேருந்துகள் சந்தையில் மிகக் குறைவாகவே உள்ளன. விதியை மாற்ற கோரியிருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.10 என நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவை ஏதேனும் சில நிறைவேற்றப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் 3,000 மினி பேருந்துகள் இயக்கத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்திருக்கும். இவ்வாறு அவர்கள் குற்றம் சாட்டினர்.