விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 வயது சிறுவனுக்கு மண்டையோட்டை திறந்து அரிய அறுவை சிகிச்சை – சாதனை
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரிதான மூளைக் கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு மண்டையோட்டை திறந்து அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ஜெயசிங் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே செம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் பாலபிரசாத் (7), கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி மூளைக் காய்ச்சல் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்றாவது முறையாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான்.
அச்சிறுவனுக்கு அடிக்கடி மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டது. அதில், மூளைக்கும் மூக்கின் எலும்பு பகுதிக்கும் இடையே துவாரம் இருப்பதும், அதன் வழியாக தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுவதும் உறுதியானது.
இதையடுத்து, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கணபதிவேல் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழு, சிறுவனுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த துவாரத்தை மூடி வெற்றிகரமாக சரிசெய்தனர்.
இத்தகைய அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டால், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுவன் முழுமையாக நலம்பெற்று சிகிச்சைக்கு பின் ஆரோக்கியமாக இருக்கிறான்.
இந்த சிகிச்சையில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் அரவிந்த் பாபு உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் குழுவும் பங்கேற்றனர்.
மேலும், உடல் உறுப்பு தான துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.