முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இசை மன்னன் இளையராஜாவின் 50 ஆண்டுகளான இசைப் பயணத்தை முன்னிட்டு, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு பாராட்டு விழா நடைபெறுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,500-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. 1975-ம் ஆண்டு தொடங்கிய அவரது இசை பயணம், இவ்வாண்டு 50 வருடங்களை நிறைவு செய்கிறது.

மேற்கத்திய சிம்பொனி இசையையும் இந்திய இசையுடன் இணைத்து சாதனைகள் படைத்தவர் அவர். இதனையொட்டி, ‘‘இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தை அரசு சார்பில் கொண்டாடுகிறோம்’’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில், தொடக்கமாக இன்னிசை நிகழ்ச்சி, பின்னர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்ற, முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இறுதியில் இசைஞானி இளையராஜா நன்றியுரை வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களை, முன்னதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அதிகாரிகள், நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் நேரில் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box