சீதாராம் யெச்சூரி நினைவு தினத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உடல் தானம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கட்சியினர் உடல் தானத்தில் பங்கேற்றனர். தமிழகமெங்கும் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் உடல் தானம் இயக்கம் தொடங்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முதலில் உடல் தானம் உறுதி மொழி படிவத்தை பூர்த்தி செய்து அளித்தார். தொடர்ந்து தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் சம்பத், பாலபாரதி, மாவட்டச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், வேல்முருகன், செல்வா ஆகியோரும் உடல் தானப் படிவங்களை தமிழ்நாடு மாற்று அறுவைச் சிகிச்சை ஆணையத்தின் செயலர் என்.கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் மட்டும் 350-க்கும் மேற்பட்டோர், மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் தான உறுதிமொழியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தலைவரின் நினைவு நாளில் உடல் தானத்தை மருத்துவத் துறைக்கு அர்ப்பணிக்கும் விதமாகக் கொண்டாடுவது வரலாற்றுச் சம்பவம். பல காலமாக, இறந்தவரின் உடலை உடற்கூறாய்வுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால், இந்நிகழ்வின் மூலம், மனிதன் உயிரிழந்த பிறகும், அவனது உடல் மருத்துவக் கல்விக்கும் புதிய ஆராய்ச்சிக்கும் பயனுள்ளதாக அமையலாம் என்பதே சமூகத்துக்கு எடுத்துக்காட்டாகிறது. மண்ணில் கலந்து வீணாகுவதற்குப் பதிலாக மருத்துவத்துறைக்கு உதவுவது பெரும் பங்களிப்பாகும்” என்றார்.