திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் பிரசார இடத்தை அடைவதில் தாமதம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்குவதற்காக திருச்சிக்கு வந்தடைந்தார். அங்கு விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் ஆர்வமுடன் வரவேற்றனர்.
விஜய்யின் வாகனத்தை, தொண்டர்கள் விமான நிலையம் முதல் தொடரத் தொடங்கினர். காவல்துறை விதிமுறைகளை மீறியும், பெருமளவில் திரண்டதால், விமான நிலையத்திலிருந்து அவரது பிரசார வாகனம் மெதுவாக நகர்ந்தது. காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மிகுந்த கூட்டம் காரணமாக விஜய் அங்கு செல்ல தாமதமாகியுள்ளது. நிகழ்விடத்தை அடைவதற்கு இன்னும் பல மணி நேரம் ஆகலாம் என கூறப்படுகிறது.
‘ரோடு ஷோ’க்கு அனுமதி இல்லை
விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும், அவரது வாகனத்துடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி என காவல்துறை நிபந்தனைகள் விதித்திருந்தது. மேலும், சென்னை புறவழிச்சாலை – டிவிஎஸ் டோல்கேட் – தலைமை தபால் நிலையம் – பாலக்கரை – காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை சென்றுவிட்டு, மீண்டும் காந்தி மார்க்கெட் – அரியமங்கலம் பால்பண்ணை வழியாக புறவழிச்சாலைக்கு திரும்ப வேண்டும் என்பதையும் அறிவித்திருந்தது. இருப்பினும், தொண்டர்கள் திரளாகச் சூழ்ந்ததால் விஜய்யின் வாகனம் ‘ரோடு ஷோ’ போலவே நகர்ந்தது.
இலச்சினை வெளியீடு
இந்த சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை தவெக சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. மேலும், அண்ணா, எம்ஜிஆரின் படங்களுக்கு நடுவில் விஜய்யின் படம் இடம்பெற்றுள்ள பேருந்தும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திரண்டு வரும் தொண்டர்கள்
திருச்சியில் தவெக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடைபெற்ற இரண்டு மாநில மாநாடுகளையும் விஜய் வெற்றிகரமாக நடத்திய நிலையில், இன்றைய பயணத்தில் இளைஞர்கள், பெண்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் சுற்றுப்பயணத்தை தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் கூட கவனிக்கத் தொடங்கியுள்ளன.